இருமுவதால் மாரடைப்பில் இருந்து தப்ப முடியுமா?
குமரன் மெடிக்கல் சென்டர் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஈஸ்வரன் விளக்கம்.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு குறுஞ்செய்தி பரவி வருகிறது.அதில் மாரடைப்பு ஏற்படும் போது, தொடர்ந்து இருமுவதால் மாரடைப்பை தவிர்க்கலாம் என உள்ளது. இது பற்றி குமரன் மெடிக்கல் சென்டர் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஈஸ்வரன் கூறிய விளக்கம் பின்வருமாறு.
இருதயம் என்பது , உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான இரத்தத்தை, இரத்த நாளங்கள் மூலமாக கொண்டு செல்கிறது. இருப்பினும், அது இயங்குவதற்கும், அதன் தசைகள் சுருங்கி விரிந்து இரத்தத்தை உந்துவதற்கும் தேவையான சக்தி மூன்று முக்கிய இரத்த நாளங்கள் மூலமாக இருதயத்திற்கு செல்கிறது. இந்த மூன்று முக்கிய இரத்த நாளங்களில் ஏற்படும் 100% அடைப்பு தான் மாரடைப்பு உண்டாவதற்கான காரணம். அவ்வாறு மாரடைப்பு ஏற்படுவதனால் இருதய தசைகளுக்கு, இரத்தம் மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமல். அது செயலிழந்து, இருதயத்தின் உந்து சக்தி(பம்பிங்) குறைந்துவிடும்(PUMP FAILURE). இருதய தசைகளின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களினாலும், சில ரசாயன மாற்றங்களினாலும், இருதய துடிப்பில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இருதய துடிப்பு, சீரான தன்மை இல்லாமலும் எண்ணிக்கை மிக குறைந்தோ அல்லது மிக அதிகமாகவோ மாறலாம். இது அரித்மியா (ARRHYTHMIA) எனப்படும். இறுதியாக இருதயம் துடிப்பதை நிறுத்திவிடும். இது கார்டியாக் அரெஸ்ட் (CARDIAC ARREST) எனப்படும்.
இருதயத்தின் உந்துசக்தி மிகவும் குறையும் போதோ (PUMP FAILURE), இருதய துடிப்பில் மாற்றங்கள் ஏற்படும்போதோ(CARDIAC ARRHYTHMIA) , கார்டியாக் அரெஸ்ட் (CARDIAC ARREST) ஏற்படும் போதோ, மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து ஒருவர் மயக்க நிலையை அடைந்து விடுவார்கள். அந்த சூழ்நிலை, அவர் இறக்கும் தருவாயில் உள்ளார் என்பதற்கான அறிகுறி. அப்போது, அவசர மருத்துவ உதவி மட்டுமே ஓரளவுக்கேனும் பயன்படும்.அப்போது அவருக்கு CPR எனப்படும் (CARDIO PULMONARY RESUSCITATION) இருதய அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இச்சிகிச்சை மருத்துவத்துறையை சேர்ந்தவர்களோ அல்லது பயிற்சி பெற்ற பொது மக்களோ மட்டுமே அளிக்க வேண்டும். உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது மட்டுமே சிறந்த வழிமுறையாகும்.
இருமுவதால் என்ன நடக்கிறது என்பதை இப்போது பார்ப்போம். தொடர்ந்து இருமுவதனால், நெஞ்சு கூட்டிற்குள் ஏற்படும் காற்றழுத்த மாற்றங்களினால், மூளைக்கு செல்லும் இரத்தம் சிறிது அதிகப்படுத்தப்படும். மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஒருவருக்கு திடீர் என்று இருதய துடிப்பு சம்மந்தமான பிரச்சனை ஏற்படும் போது, அதை சரி செய்ய எடுக்கப்படும் முயற்சிகள் பயனளிக்க ஒரு சில மணித்துளிகள் காலதாமதம் ஆகும். அந்த இடைப்பட்ட நேரத்தில், நோயாளி மயக்கம் அடையாமல் இருப்பதற்காக, அவரை இருமச்சொல்லி சுயநினைவுடன் வைத்திருக்க முடியும். இது மட்டுமே மருத்துவத் துறைகளினால் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையாகும். தொடர்ந்து இருமுவதற்கு, முதலில் நோயாளி முழு சுயநினைவுடன் இருக்க வேண்டும். CARDIAC ARREST ஏற்படும் பெரும்பாலான நேரங்களில், ஒருவர் சுயநினைவை இழந்து விடுவதினால் இது சாத்தியம் ஆகாது.
முழு சுயநினைவுடன், நெஞ்சுவலி மட்டுமே இருக்கும் ஒருவருக்கு தொடர்ந்து இருமும் தேவை இருக்காது. தொடர்ந்து இருமுவது மாரடைப்பை தவிர்க்காது மற்றும் மாரடைப்பை சரிசெய்யாது.
மாரடைப்பின் அறிகுறிகள் ஏற்பட்ட பின் ஒருவர் செய்ய வேண்டியவை பற்றி இப்போது பார்ப்போம்.
- உடனடியாக கடினமான வேலைகள் செய்வதை நிறுத்த வேண்டும்.
- உடனடியாக படுக்க வேண்டும்.
- மருத்துவ உதவியை (AMBULANCE /108) அழைக்க வேண்டும்.
- அமைதியாக, சாந்தமாக பதற்றம் இல்லாமல் இருப்பது முக்கியம்.
- உடல் தசைகளை இறுக்கம் இல்லாமல் தளர்வான நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- மிக அருகில் உள்ள மருத்துவரை அணுகி, மாரடைப்பை உறுதிசெய்து, அதற்கான முதலுதவி மருந்துகளை (LOADING DOSE ) உட்கொள்ள வேண்டும்.
- மிக விரைவாக, 24 மணி நேரமும் அவசர இருதய சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைக்குச் சென்று, இருதய இரத்தக் குழாயில் உள்ள அடைப்பை சரிசெய்யும் சிகிச்சை (ஆஞ்சியோபிளாஸ்ட்டி) செய்ய வேண்டும்.
- மாரடைப்பு ஏற்பட்ட பின், சிகிச்சைக்காக, நெடுந்தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- காலவிரயம் என்பது, இதய தசைகளை செயல் இழக்க செய்துவிடும். எனவே நோயாளி இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்று அடைப்பை நீக்குவதே அவருக்கு நாம் செய்யும் பேருதவி ஆகும்.
~ டாக்டர். ஈஸ்வரன் , இருதய சிகிச்சை நிபுணர்