“புற்று நோய் அறிகுறிகள், தவிர்க்கும் வழிமுறைகள் “
(Cancer Symptoms and Ways to reduce Cancer risk)
சப்தமில்லாமல் நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று. இது வந்து விட்டால் இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, அதற்கான சிகிச்சை முறைகள் வந்து விட்டாலும், மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகம் தான்.
புற்று நோய் என்றால் என்ன?
உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களை பாதிக்கும் நோயைத்தான் புற்று நோய் என்கிறோம்.
புற்றுநோய் ஒரு தொற்று நோய் அல்ல. ஆண்களுக்கு கழுத்து மற்றும் தொண்டை, நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், பிராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது.
நம் உடல் பல வகையான உயிரணுக்கலால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்த சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது புதிய உயிரணுக்கள் உருவாகி விடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாக தோன்றுகின்றன.
எல்ல கட்டிகளுமே புற்றுநோய் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை. அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை. சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிகின்றன. இரத்தம் மாற்று நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால் உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகின்றன.
புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் (Cancer Symptoms)
உடலில் புற்றுநோய் ஏற்படும் பாகத்தை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். கீழ்கண்ட அறிகுறிகள் புற்றுநோய் தவிர மற்ற நோய்களிலும் ஏற்படலாம். எனவே இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்வது நல்லது
- குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு
- முழுங்குவதில் தொடர் சிரமம்
- தொண்டையில் அடைப்புப் போல் தோன்றுதல்
- நாக்கை அசைப்பதில் சிரமம்
- உடலில் கட்டி தோன்றுதல், புற்றுநோயில் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை, பரவிய பிறகுதான் வலி ஏற்படும் காரணமில்லாமல் எடை குறைவு
புற்றுநோய்க்கு முந்தைய நிலையை எவ்வாறு கண்டுகொள்வது
உதாரணமாக….
- வாயில் தோன்றும் புற்றுநோய்கள்
- புகை மற்றும் புகையிலை பழக்கம் உள்ளவர்கள் மாதத்துக்கு ஒரு முறையாவது தாங்களே கண்ணாடியின் உதவியுடன் வாயைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது
- ஆறாத புண்
- கட்டி, தடிப்பு,
- ஈறு, நாக்கு மற்றும் வாயின் பிற பகுதிகளில் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகுதல்
புற்றுநோயை தடுக்க முடியுமா?
- புற்றுநோயை தடுக்க உத்திரவாதமான முறை எதுவும் இல்லை. அனால், சரியான வாழ்க்கை முறையின் மூலம் நோய் ஏற்படும் வாய்ப்பை பெருமளவில் குறைக்க முடியும்
- புகையிலைப் பொருட்களைப் (சிகரெட், பீடி, பான் வகைகள்) பயன்படுத்தாமை மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் ஒரு சேர இருப்பது தொண்டைப்புண்களின் வாய்ப்பை அதிகரிக்கும்
- குறைந்த கொழுப்பு, அதிக காய்கறி, பழம் முழுமையான தானியங்கள் உட்டகொள்ளுதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளைத் தவிர்த்தல்.
- உடல் பருமன் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுதல்
- வைரஸ்களால் ஏற்படும் குறிப்பிட்ட புற்றுநோய்களை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்
சிகிச்சை முறைகள்
உடலில் கட்டி உள்ள இடம், நோய் பரவியுள்ள நிலை, நோயாளியின் வயது, உடல் நிலை போன்றவற்றை பொறுத்து சிகிச்சை வேறுபடுகிறது.
அறுவை சிகிச்சை- இது கட்டியை அகற்றுவதற்காக செய்யப்படுவது
கதிரியக்கச் சிகிச்சை (Radiotherapy) – இந்த சிகிச்சை முறையில் சக்தி வாய்ந்த கதிர் மூலம் புற்றுநோய் உயிரணுக்கள் கொள்ளப்படுகிறது
கீமோதெரப்பி(Chemotherapy) – மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது
~ Dr. J. பிரவீன் குமார் MBBS., MS (ENT)
~ காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்